பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-01-03 22:30 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

அப்போது அவர்கள் கலெக்டரிடம் கூறுகையில், நாங்கள் பாப்பான்குளம் பகுதியில் 1965–ம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். அரசு சார்பில் எங்களில் 90 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் சரியான ஆவணங்கள் இல்லை என்று கூறி அரசால் வழங்கப்பட்ட எங்களுடைய பட்டாவை சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறை பத்திரப்பதிவு செய்யவோ, அடமானம் வைக்கவோ, விற்கவோ, வாங்கவோ முடியாது என்று மறுத்து வருகிறது.

எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க ஆவண செய்வதோடு பட்டாவை உட்பிரிவு செய்தும், பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கவும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்