தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’க்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

Update: 2018-01-03 23:00 GMT
காட்பாடி,

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகள் சீரமைக்கப்பட்டதில் ஒருசில குறைபாடுகள்தான் உள்ளன. இதுபற்றி கருத்து தெரிவிக்க 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருப்பது போதுமானதுதான். மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தால் அது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்குதான் சாதகமாக அமையும். எனவே, அது தேவையில்லாதது.

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை, தமிழகத்தில் பயன்படுத்தவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் பயன்படுத்தவில்லை என்பதை தெரிந்துகொண்டேன். இதுகுறித்து கலெக்டரை சந்தித்து பேச இருக்கிறேன்.

அரசு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாக திறமையின்மையே காரணம். இதேநிலை நீடித்தால் அரசு போக்குவரத்துக்கழகங்கள் இருக்குமா? என்பது சந்தேகம். நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை, சபையில் அனுமதித்தால், ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா?, இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலைவர் கதிர்ஆனந்த், மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்