கோரிக்கைகளை வலியுறுத்தி கால் டாக்சி, மேக்சி கேப் ஓட்டுனர்கள் சாலை மறியல்
கோவையில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால் டாக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுட்ட 140 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோவை,
டாக்சி, மேக்சி கேப் உள்ளிட்ட ஓட்டுனர்கள் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்ற சட்டத்தை தமிழக அரசு அமல் படுத்துவதற்கு கால் டாக்சி, மேக்சி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி நேற்று கால்டாக்சி மற்றும் மேக்சிகேப் ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் நிறுத்தி வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பீளமேடு போலீசார் இங்கு வாகனங்களை நிறுத்தி வைக்க அனுமதி இல்லை என்று கூறினர். இதனால் அவர்கள் அவினாசி சாலையில் உள்ள சித்ராவில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த முயன்றனர். ஆனால் அதற்கும் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கால் டாக்சி, மேக்சி கேப் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் (மையம்) முன்பு தங்களது வாகனங்களை நிறுத்தினர். பின்னர் திடீரென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவை மாவட்ட கால் டாக்சி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்க தலைவர் கவுதம், ஒருங்கிணைப்பாளர் கோகுல் ஆகியோர் கூறியதாவது:– மாநில அரசு தற்போது அமல்படுத்தியுள்ள இந்த சட்டத்தால் நாங்கள் 8 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்ட முடியாத நிலை உள்ளது.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் முதல் முறை அபராதமும், 2–வது முறை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. இதனால் நாங்கள் நீண்ட தூரத்துக்கு வாகனங்களை இயக்க முடியாது. இதுதவிர ஆம்னி பஸ்களுக்கு ஆதரவாக மேக்சி கேப் வாகனங்களில் 12 பேருக்கு மேல் ஏற்றி செல்லக்கூடாது என்று நிர்ப்பந்தம் செய்கின்றனர். வெளிநாட்டு கால் டாக்சி நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது.இந்த கோரிக்கைகளுக்காகத்தான் வேலைநிறுத்தம் செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதன்பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கால் டாக்சி, மேக்சி கேப் ஓட்டுனர்கள் 140 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.