வார்டுகள் மறுவரையறை குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் மறுவரையறை குறித்து அனைத்துக்கட்சி பிரதி நிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-01-03 22:45 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின் படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மறுவரையறை செய்யப்பட்ட பகுதிகள் குறித்த தகவல்கள் நகராட்சி அலுவலகம், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, இதுகுறித்த கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்து பூர்வமாக நகராட்சி ஆணையர் அல்லது மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 2.1.2018 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் மறுவரையறை குறித்த கருத்துக்களை கேட்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் சில வார்டுகளில் மறுவரையறை செய்யப்பட்ட பகுதிகளில் மாற்றம் செய்யக்கோரும் பகுதிகள் குறித்து தெரிவித்தனர். அனைவரின் கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டுமென்றும், கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை குறித்த கருத்துருக்களை வழங்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையினை ஏற்று ஊராட்சி வார்டு மறுவரையறை குறித்த கருத்துருக்களை வழங்க 5.1.2018 மாலை 5 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி வார்டு மறுவரையறை குறித்த கருத்துக்களை சம்பந்தப்பட்ட வார்டு மறுவரையறை அலுவலரிடமோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்திலோ அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அமர்சிங் உள்ளிட்ட அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்