சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக 4 கோவில் யானைகள் தேக்கம்பட்டி பயணம்

சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட 4 கோவில் யானைகள் தேக்கம்பட்டிக்கு பயணம் செய்தன.

Update: 2018-01-03 22:45 GMT
ஸ்ரீரங்கம்,

தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளின் நலனுக்காக தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது.

இம்முகாமிற்கு திருச்சி மண்டலத்திலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாள், மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமி, திருவானைக்காவல் கோவில் யானை அகிலா, சமயபுரம் கோவில் யானை மசினி ஆகிய யானைகள் லாரிகள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பிருந்து 4 யானைகளுடன் முகாமிற்கு புறப்பட்ட லாரிகளை சமயபுரம் கோவில் இணை ஆணையர் குமரதுரை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திருவானைக்காவல் கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை நடைபயிற்சியும், பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்