சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் கலெக்டர் திறந்து வைத்தார்

சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.;

Update: 2018-01-03 21:30 GMT

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்த ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு ஹைவேவிஸ் மலை மற்றும் சுருளி வனப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக நீர்வரத்து உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 52.50 அடி ஆகும். கடந்த 2014–ம் ஆண்டு அணை நிரம்பியது. அதன் பிறகு மழை பெய்தும் அணை நிரம்பவில்லை. அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழைக்கு அணை முழு கொள்ளளவை எட்டியது.

இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

எனவே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், அணையில் இருந்து வினாடிக்கு 14.47 கன அடி வீதம் 94 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். சண்முகாநதி கால்வாய் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகள் விரைவாக சீரமைக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன், தாசில்தார் ஜவகர்லால்பாண்டியன், பொதுப்பணித்துறை உதவி செயற்பெறியாளர் அன்புச்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்