நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மற்றொரு பஸ் மோதல்; 18 பேர் காயம்

திருச்செங்கோடு அருகே, நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மற்றொரு பஸ் மோதிய விபத்தில் 18 பயணிகள் காயம் அடைந்தனர்.

Update: 2018-01-03 23:00 GMT
எலச்சிபாளையம்,

திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. வேலாத்தாள் கோவில் பஸ் நிறுத்தம் அருகே வந்ததும் டிரைவர் அழகுராஜ் (வயது 22) பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது ராசிபுரத்தில் இருந்து ஈரோட்டை நோக்கி ஒரு தனியார் பஸ்சை நாகராஜ் (33) என்பவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார். வேலாத்தாள் கோவில் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த பஸ் மீது நாகராஜ் ஓட்டி வந்த பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் சக்திநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் (53), ராசிபுரத்தைச் சேர்ந்த சாந்தி (60), கொங்கணாபுரம் அம்சா (60), ராசிபுரம் அருகே பள்ளபாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் (21), ராசிபுரம் சீனிவாசன் (45), தோக்கவாடி மைனாவதி (54), சேலத்தைச் சேர்ந்த குஞ்சான் (60), ராசிபுரம் ரெஜினா (57), எலச்சிபாளையம் குமார் (23), திருச்செங்கோடு அருண்குமார் (26), திருச்செங்கோடு அரவிந்த் (12) உள்பட 18 பயணிகள் காயம் அடைந்தனர். இவர்கள் 18 பேரும் 2 தனியார் பஸ்களிலும் பயணம் செய்தவர்கள் ஆவார்கள். காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர்கள் அழகுராஜ், நாகராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்