கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

காவேரிப்பட்டணம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-01-03 22:15 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவீரஅள்ளியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள். அதே பகுதியை சேர்ந்த சின்ன பையன் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை அவர் வழக்கம் போல சாமிக்கு பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டிச் சென்றார்.

பின்னர் நேற்று காலையில் அவர் மீண்டும் சாமிக்கு பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னபையன் கோவிலுக்குள் சென்று பார்த்தார்.

அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் கோவில் உண்டியலை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் உண்டியல், நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்