மாணவ-மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்ய பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்ய பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் அறிவுறுத்தினார்.;

Update: 2018-01-03 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் விலையில்லா காலணிகள், சீருடைகள் தமிழகஅரசால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பள்ளிகளில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களை அவ்வப்போது கல்வித்துறை அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.

கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானத்தின் வழியாக செல்லும் மின்கம்பிகள், மின்மாற்றிகளை அகற்றுவது குறித்து உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மின்சாரவாரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவரை ஆதார் பதிவு செய்யாத மாணவ-மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்ய சிறப்பு முகாமை பள்ளிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில்அனைவருக்கும் கல்வித்திட்ட உதவி அலுவலர் சீனிவாசன், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட உதவி அலுவலர் சுப்பிரமணியன், பள்ளிகள் உதவி ஆய்வாளர் சீனிவாசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்