மலேசியாவில் மாயமான மகனை கண்டுபிடிக்கக்கோரி தாய் மனு

மலேசியாவில் மாயமான மகனை கண்டுபிடிக்ககோரி அவருடைய தாய் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.;

Update: 2018-01-03 22:30 GMT

ராமநாதபுரம்,

திருவாடானை தாலுகா ஆனந்தூர் பகுதியை சேர்ந்த தாஜுதீன் என்பவருடைய மனைவி குல்சார்பீவி. இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

 எனது மகன் முகமது யாசின் கடந்த 4 ஆண்டுகளாக மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் பட்டர் வொர்த் என்ற இடத்தில் பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் ஆனந்தூரில் நடைபெற்ற திருமணத்திற்கு வருவதற்காக விசா பெர்மிட்டை ரத்து செய்துவிட்டு விமானம் மூலம் சொந்த ஊருக்கு வருவதாக இருந்தார்.

கடந்த மாதம் 21–ந்தேதி பஸ் மூலம் புறப்பட்டு கோலாம்பூர் வந்துவிட்டதாகவும் அங்கிருந்து விமான நிலையம் சென்று விமானம் ஏறி வந்துவிடுவதாகவும் தகவல் தெரிவித்தான். ஆனால், அதன்பின் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. விமான நிலையத்திற்கு செல்வதாக கூறியவன் அதன்பின் என்ன ஆனான் என்ற விவரம் தெரியவில்லை. ஊருக்கும் வரவில்லை. விமான நிலையத்திற்கும் செல்லவில்லை. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இதுகுறித்து அங்குள்ள உறவினர்கள் மூலம் மலேசியா போலீசில் புகார் செய்யப்பட்டுஉள்ளது. புகார் செய்து 12 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. எனது மகன் எங்கு சென்றான், அவனை யாராவது கடத்தி சென்றுவிட்டார்களா என்பது போன்ற எந்த விவரங்களும் தெரியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு மூலம் மத்திய அரசை வலியுறுத்தி மலேசியாவில் எனது மகனை கண்டுபிடித்து கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்