ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

குழித்துறை அருகே ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2018-01-03 22:15 GMT
நாகர்கோவில்,

களியக்காவிளையை அடுத்த கல்லுவிளைவீட்டை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன்(வயது 29). இவர், படந்தாலுமூட்டில் உள்ள ஒரு தனியார் டயர் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், வேலைக்கு சென்ற அவர் இரவு நீண்டநேரமாகியும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இதனால், வீட்டில் உள்ளவர்கள் பதற்றமடைந்தனர். மேலும், அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில், குழித்துறை–பாறசாலை ரெயில் நிலையத்துக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் நள்ளிரவில் ரெயில் மோதி வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

விசாரணை

இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ராஜபூபதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த வாலிபர் ஸ்ரீகண்டன் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் வேலை முடிந்து வீடுதிரும்பும் வழியில், ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார் என்றும் தெரியவந்தது.

சாவு

இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி ஸ்ரீகண்டன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஸ்ரீகண்டனின் உறவினர் நாகர்கோவில் ரெயில் வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்