அரசு பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்: கால்நடை மருத்துவர் உள்பட 2 பேர் பலி

பாபநாசம் அருகே அரசு பஸ்சும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கால்நடை மருத்துவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-01-02 22:45 GMT
பாபநாசம்,

தஞ்சை பாம்பாட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது38). இவர் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் கூகுரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு லட்சுமி(32) என்ற மனைவியும், சுரேஜ்குமார்(9) என்ற மகனும், நிதிஸ்ரீ (5) என்ற மகளும் உள்ளனர். அய்யம்பேட்டை சாலை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (45). இவர் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்த தீவிர பக்தர்.

கால்நடை மருத்துவர் பார்த்திபனும், சீனிவாசனும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நள்ளிரவில் ஊருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

பஸ் மோதியது

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது எதிரே கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பார்த்திபனும் அவருடைய நண்பர் சீனிவாசனும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்திபன், சீனிவாசன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தை கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கிடுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து பார்த்திபனின் மனைவி லட்சுமி பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மெலட்டூர் தென்னஞ்சோலை கிராமத்தை சேர்ந்த துளசிஅய்யா (38) என்பவரை கைது செய்தனர். புத்தாண்டில் சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற டாக்டரும், அவருடைய நண்பரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்