அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது

ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்தனர்.

Update: 2018-01-02 22:45 GMT
ஸ்ரீரங்கம்,

திருவாதிரையையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு நடராஜருக்கு விபூதி, பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட பலவகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து நேற்று காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. முன்னதாக காலை 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே பல்லக்குகளில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தாயுமானவர் சன்னதியில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு, விபூதி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு சுவாமிகளுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலிலும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாளுடன் வீதி உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்