புனேயில் பயங்கர மோதல்; வாலிபர் பலி நீதி விசாரணைக்கு முதல்–மந்திரி பட்னாவிஸ் உத்தரவு

மாநிலம் முழுவதும் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் வாலிபர் பலியானார்.

Update: 2018-01-02 22:30 GMT

மும்பை,

மாநிலம் முழுவதும் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் வாலிபர் பலியானார். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

போர் நினைவு தினம்

இந்தியா ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், கடந்த 1818–ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குழுவுக்கும், மராட்டியத்தை சேர்ந்த பேஷ்வா படையினருக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குழு, பேஷ்வா படையை தோற்கடித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.

குறிப்பாக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குழுவின் போர் படையில், அங்கம் வகித்த நம் நாட்டை சேர்ந்த ஒரு பிரிவினரின் அயராத முயற்சியால், பேஷ்வா படை தோற்றதாக நம்பப்படுகிறது. இந்த போர் வரலாற்றில் ‘பீமா– கோரேகாவ் போர்’ என்று அறியப்படுகிறது. மேலும், கிழக்கிந்திய கம்பெனி குழுவின் இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் மராட்டியத்தில் குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

வன்முறை

அதன்படி, நேற்று பீமா– கோரேகாவ் போரின் 200–வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி புனேயில் போர் நினைவுச்சின்னம் நோக்கி லட்சக்கணக்கானோர் திரண்டு வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியபடி அங்கு வந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பயங்கர மோதல் உண்டானது.

திடீரென வன்முறை தொற்றிக்கொண்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், புனே நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் வாலிபர் ஒருவர் பலியானார்.

புனே மட்டுமின்றி, மும்பை, தானே, அவுரங்காபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பிற நகரங்களிலும் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமைய சமாளிக்க போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்னாவிஸ் பேட்டி

இதனிடையே, பீமா– கோரேகாவ் போர் நினைவு வன்முறை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நிருபர்களிடம் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:–

மராட்டியம் வேகமாக முன்னேறி வருகிற மாநிலம். இங்கு சாதி மோதல்களுக்கு இடமில்லை. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். சமூக வலைதளங்களில் புரளி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டாம்.

ரூ.10 லட்சம் இழப்பீடு

புனேயில் போர் வெற்றியை கொண்டாடுவதற்காக சுமார் 3 லட்சம் பேர் திரண்டு இருக்கின்றனர். இதில், சிலர் பிரச்சினையை ஏற்படுத்த முயன்றுள்ளனர். அங்கு ஆறு கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு, பெரிய பிரச்சினை ஏதும் வராமல் தடுத்துவிட்டனர்.

பீமா– கோரேகாவ் போர் நினைவு வன்முறை சம்பவம் தொடர்பாக பணியில் இருக்கும் ஐகோர்ட்டு நீதிபதி விசாரணை நடத்துவார். மேலும், வன்முறையில் பலியான வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவரது சாவு குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்