புத்தாண்டை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய கார் டிரைவர் மாரடைப்பால் சாவு

புதுவையில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு ஊர்திரும்பியபோது கார் டிரைவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-01-02 22:45 GMT

பாகூர்,

திருவாரூர் மாவட்டம் வல்லம்மாள் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜநீலதிலகம் (வயது51). இவர் மின்வாரிய அலுவலத்தில் உதவி பொறியாளராக உள்ளார். இவர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுவைக்கு காரில் வந்தார். அந்த காரை திரூவாரூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் வினோத் (33) என்பவர் ஓட்டினார்.

புதுவையில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு நேற்று முன்தினம் ராஜநீலதிலகம் காரில் புறப்பட்டார். காரை வினோத் ஓட்டிச்சென்றார். புதுச்சேரி–கடலூர் சாலை காட்டுக்குப்பம் அருகே வந்தபோது வினோத்திற்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், ராஜநீலதிலகத்திடம் கூறினார்.

உடனே ராஜநீலதிலகம், வினோத்தை சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு கடலூர் மஞ்சக்குப்பத்திற்கு வரும்படி கூறினார். பின்னர் அவர், ஆட்டோவில் ஏறி மஞ்சக்குப்பத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். ஓட்டலில் சாப்பிட்டு முடித்து வெகு நேரமாகியும் வினோத் வரவில்லை. உடனே அவர், வினோத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை.

இதனால் ராஜநீலதிலகம் மீண்டும் ஆட்டோவை பிடித்து காட்டுக்குப்பத்திற்கு சென்றார். அப்போது அவருடைய கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் அருகே சென்று பார்த்தபோது காரில் டிரைவர் இருக்கையில் வினோத் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து ராஜநீலதிலகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வினோத் மாரடைப்பால் இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்