நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் 80 சதவீதம் நீர் இருப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் 80 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இதனால் பிசான சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2018-01-02 23:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக 11 அணைகளும் மற்றும் 2,518 குளங்களும் அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு மற்றும் நம்பியாறு ஆகிய 11 அணைகள் உள்ளன. இதில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் தண்ணீர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்துக்கும், பல மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்துள்ளது. குறிப்பாக மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் அதன் உச்ச நீர்மட்டத்தை நெருங்கியது. இந்த அணைகளில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் கருணையால் அணைகளில் நீர் ததும்பி அழகாக காட்சி அளிக்கிறது. இதில் பிரதான அணைகளில் 85 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக 80 சதவீதத்துக்கு மேல் அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.

நேற்று நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 127.40 ஆகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.97 அடியாகவும், மணிமுத்தாறு அணை 112.13 அடியாகவும், கடனாநதி 81.80 அடியாகவும், ராமநதி அணை 77.75 அடியாகவும் இருந்தது.

இதுதவிர கருப்பாநதி 59.93 அடியாகவும், குண்டாறு 35.37 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 49 அடியாகவும், நம்பியாறு 14.20 அடியாகவும், கொடுமுடியாறு 16 அடியாகவும், அடவிநயினார் அணை 122.25 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.

அணைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு பிசான நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து நெல்லை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பெருமாள் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் மற்றும் மானாவாரி குளங்கள் பகுதியில் மொத்தம் 53 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் ஒருசில இடங்களில் தற்போதும் நெல் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு அணைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இருப்பதால் பிசான நெல் சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும். மானாவாரி பகுதியில் ஒருசில இடங்களில் குளங்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு செய்யவில்லை. கிணற்றில் போதிய அளவுக்கு நீர் இருப்பு உள்ள பகுதியில் மட்டுமே நெல் நடவு செய்யப்பட்டு இருப்பதால், அந்த பாசனத்துக்கும் பிரச்சினை இல்லை.

மேலும் உரம் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. வேளாண்மைத்துறை அதிகாரிகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பகுதிகளுக்கு சென்று விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, மகசூல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்