திருப்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்தம்
திருப்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
திருப்பூர்,
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவ கல்வி தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம்(ஐ.எம்.ஏ.) எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவித்தது.
அதன்படி திருப்பூர் மாநகரில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர். திருப்பூர் மாநகரில் 75 மருத்துவமனைகள் மற்றும் 375 கிளீனிக்குகளின் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவசர சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 450 டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்கள். டாக்டர்கள் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகிகள் கூட்டம் கணியாம்பூண்டியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளை தலைவர் டாக்டர் நஷ்ருதீன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் சத்தியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் முருகானந்தம், துணைத்தலைவர் டாக்டர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டாக்டர் பிரகாசம், தமிழ்நாடு கிளையின் மாநில தலைவர்(தேர்வு 2019) டாக்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
இதுகுறித்து திருப்பூர் கிளை தலைவர் டாக்டர் நஷ்ருதீன் கூறும்போது, ‘‘மத்திய அரசு கொண்டு வரும் மசோதாவால் நவீன முறை சிகிச்சைகளை 6 மாத பயிற்சி வகுப்புக்கு பிறகு அனைத்து வழிமுறை மருத்துவர்களும் செய்ய வழிவகுக்கிறது. மேலும் ஆணையத்தில் பிற துறைகளை சேர்ந்தவர்கள் ஆட்சி துறை நிர்வாகிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். வெளிநாடுகளில் படித்தவர்கள் நுழைவுத்தேர்வு இல்லாமல் டாக்டர்களாக பணியாற்ற வழிவகுக்கும். இந்த மசோதாவை எதிர்த்து வேலைநிறுத்தம் போராட்டம் நடக்கிறது. அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு மட்டும் இயங்கியது’’ என்றார்.
இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 150–க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. வேலைநிறுத்த போராட்டத்தில் 800–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரிகளின் இணை இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறும்போது, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் முழுமையாக டாக்டர்கள் பணியாற்றினார்கள். அரசு டாக்டர்கள் யாரும் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார்.