பெரியதோட்டம் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-02 21:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 43–வது வார்டுக்கு உட்பட்ட பெரியதோட்டம் 7–வது, 9–வது வீதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அதிகமாக காம்பவுண்டு வீடுகள் உள்ளன. ஒரே காம்பவுண்டில் 10–க்கும் மேற்பட்ட வீடுகள் காணப்படுகின்றன. இந்த பகுதிக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 27–ந் தேதி இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் நேற்று வரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி சப்பை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த 1½ மாதமாக மின்மோட்டார் பழுதடைந்து இருப்பதால் சப்பை தண்ணீரும் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் கடுமையான சிரமத்தை சந்தித்த பெண்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் 1.45 மணி அளவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே காங்கேயம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் முனியாண்டி ஆகியோர் சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பழுதடைந்த மின்மோட்டாரை விரைவில் பழுது நீக்கி கொடுப்பதாகவும், மாநகராட்சி மூலம் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்தார். மேலும் காம்பவுண்டு வீடுகள் உள்ள பகுதிக்கு கூடுதலாக குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பித்தால் உடனடியாக குழாய் இணைப்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக 10 நிமிடம் காங்கேயம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்