முதல்–மந்திரி சித்தராமையா 5–ந் தேதி சிக்கமகளூரு வருகை பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்

முதல்–மந்திரி சித்தராமையா வருகிற 5–ந் தேதி சிக்கமகளூருவுக்கு வருகிறார். அப்போது அவர் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

Update: 2018-01-02 21:00 GMT

சிக்கமகளூரு,

முதல்–மந்திரி சித்தராமையா வருகிற 5–ந் தேதி சிக்கமகளூருவுக்கு வருகிறார். அப்போது அவர் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

முதல்–மந்திரி சித்தராமையா

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கர்நாடக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்ற பெயரில் முதல்–மந்திரி சித்தராமையா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அவர் காங்கிரசுக்கு மக்களிடையே ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் வருகிற 5–ந் தேதி முதல்–மந்திரி சித்தராமையா சிக்கமகளூரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்றைய தினம் காலையில் அவர் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவில் உள்ள ஒப்லிகர் அரசு பள்ளி மைதானத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் ஒய்சாலா விளையாட்டு மைதானத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

ரூ.333 கோடியில்...

பின்னர் அவர் மீண்டும் ஒப்லிகர் அரசு பள்ளிக்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கடூரில் உள்ள போலீஸ் பயிற்சி மைய மைதானத்திற்கு செல்கிறார். அதையடுத்து அவர் கடூரில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட் வளாகத்தில் நடைபெறும் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் ரூ.333 கோடி அளவில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

அதையடுத்து அவர் தரிகெரே தாலுகா அஜ்ஜாம்புராவுக்கு வருகிறார். அங்கு செட்டர் சித்தப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் 5–ந் தேதி இரவு கெம்மன்குந்தியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்குகிறார்.

பெங்களூருவுக்கு செல்கிறார்

அந்த சொகுசு விடுதியில், முன்னொரு காலத்தில் மைசூரு மன்னர் சாமராஜ உடையார் தங்கியதாக கூறப்படுகிறது. அங்கு ஓய்வு எடுக்கும் சித்தராமையா, 6–ந் தேதி காலையில் கெம்மன்குந்தி அருகே உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினரும், காங்கிரசாரும் செய்து வருகிறார்கள். முதல்–மந்திரியின் வருகையையொட்டி இப்போதிருந்தே சிக்கமகளூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்