கைத்தறி நெசவாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-01-02 22:30 GMT

சென்னிமலை,

சென்னிமலையில் உள்ள சென்கோப்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் சேமநல நிதியை எடுப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக நெசவாளர்களுக்கும், சங்க மேலாளர் சக்திவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது மேலாளர் சக்திவேலை நெசவாளர்கள் தாக்கியதாக கூறி கடந்த மாதம் 27–ந் தேதி நெசவாளர்கள் மீது சங்க அலுவலக வளாகத்திலேயே தாக்குதல் நடைபெற்றது.

சங்கத்திற்கு சம்பந்தம் இல்லாத ஆட்களால் நெசவாளர் லோகநாதன் என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் லோகநாதனை காப்பாற்ற வந்த மற்ற சில நெசவாளர்களும் தாக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், இதற்கு உறுதுணையாக இருந்த மேலாளர் சக்திவேல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் சென்னிமலை பஸ் நிலையம் முன்பு அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அ.செ.கந்தசாமி தலைமை தாங்கினார். எஸ்.பொன்னுசாமி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), எஸ்.சின்னச்சாமி (ஏ.ஐ.டி.யு.சி), கே.ஆர்.தங்கராஜ் (ஐ.என்.டி.யு.சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ நா.பெரியசாமி ஆகியோர் தீர்மானங்கள் குறித்து பேசினார்கள்.

நெசவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இதுகுறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜிதேந்திரன் (காங்கிரஸ்), செந்தில் (கொ.ம.தே.க), ஈஸ்வரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), அ.செல்வராசு, குமரன் (புரட்கிர விவசாய தொழிலாளர் முன்னணி) உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சென்கோப்டெக்ஸ் நெசவு கூடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண், பெண் உறுப்பினர்கள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்