வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 4 ஏரிகளுக்கு தண்ணீர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. திறந்து விட்டார்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 4 ஏரிகளுக்கு இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தண்ணீர் திறந்து விட்டார்.

Update: 2018-01-02 21:15 GMT

அந்தியூர்,

அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு உயரம் 33.33 அடியாகும். கடந்த மாதம் பெய்த பருவமழையால் அணை அதன் முழுகொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து அந்தியூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதிக்கு உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 4 ஏரிகளுக்கு நேற்று தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ கலந்து கொண்டு அணையின் மதகை திருக்கி தண்ணீரை திறந்துவிட்டார். அப்போது தண்ணீர் மதகு வழியாக சீறி பாய்ந்து வெளியே வந்தது. அங்கிருந்த அனைவரும் பூப்போட்டு வரவேற்றனர்.

பின்னர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ கூறும்போது, ‘அணையில் இருந்து 18.575 மில்லியன் கன அடி தண்ணீர் ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 13 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 809 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற உள்ளது’. என்றார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலுச்சாமி, செல்வராஜ், கிருஷ்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், அந்தியூர் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்