கால்நடைகளை மேய்க்க எதிர்ப்பு, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு நிலத்தில் கால்நடைகளை மேய்க்க தனியார் எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-02 22:45 GMT

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது மேல்முதலம்பேடு கிராமம். இங்கு உள்ள சில தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தினர் தங்கள் சூளைகளுக்கு அருகே உள்ள சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்களது கால்நடைகளை மேய்க்க வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

மேற்கண்ட தனியாரின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்று இருப்பதால் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற இயல வில்லை என தாசில்தார் அலுவலகத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

இது தவிர ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை மேற்கண்ட அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியாரும் அந்த பகுதிக்குள் நுழைந்து மண் அள்ளுவது மற்றும் அங்கு உள்ள செங்கல் போன்ற பொருட்களை அகற்றுவது உள்பட எவ்வித வேலையிலும் ஈடுபடக்கூடாது என்றும், அதே சமயத்தில் கிராம மக்களும் அங்கு நுழைய கூடாது என்றும் ஆனால் தங்களது கால்நடைகளை கிராம மக்கள் அங்கு மேய்த்துக்கொள்வதில் எந்த வித தடையும் இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கண்ட அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தங்களது கால்நடைகளை அந்த பகுதி மக்கள் மேய்ப்பதற்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது தனியார் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஏற்கனவே அதிகாரிகள் மத்தியில் முடிவு செய்யப்பட்டது போல கால்நடைகளை மேற்கண்ட இடத்தில் மேய்த்திட யாரும் தடை விதிக்கக் கூடாது என்றும், இந்த பிரச்சினையில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து கிராம மக்கள் அப்பகுதியில் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பாதுகாப்பிற்காக கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் சீனு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோபால், வட்ட செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சூரியபிரகாஷ், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவலறிந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது. இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே வரையறுத்து எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. கிராம மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்கு ஏற்ப உரிய அதிகாரிகளை கொண்டு அரசின் புறம்போக்கு நிலம் தொடர்பாக நில அளவீடு செய்யப்பட்டு அதற்கான எல்லை வகுக்கப்படும்.

பின்னர் எந்த பிரச்சனையும் இன்றி மேற்கண்ட அளவீடு செய்யப்பட்ட இடத்தில் கிராம மக்கள், தங்களது கால்நடைகளை மேய்த்துக்கொள்ளலாம் என தாசில்தார் ராஜகோபால் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அந்த பகுதி மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.


மேலும் செய்திகள்