உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு: கோர்ட்டு முன்பு வக்கீல்கள் நகல் எரிப்பு போராட்டம்

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு முன்பு வக்கீல்கள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-02 22:30 GMT

திண்டுக்கல்,

பிரமாண பத்திரம், வழக்கு ஏற்பு படிவம் ஆகியவற்றை தாக்கல் செய்யும் போது, தமிழ்நாடு பார் கவுன்சில் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை வக்கீல்கள் இணைக்க வேண்டும். மேலும் அதற்கு சான்றொப்பம் போடும் வக்கீல்களும் தங்களுடைய அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில், மாவட்ட கோர்ட்டு முன்பு நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தமுனிராஜ், துணை தலைவர் சிவகுமார், இணை செயலாளர் முருகேசன், பொருளாளர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் குறித்து வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:–

பிரமாண பத்திரம், வழக்கு ஏற்பு படிவம் ஆகியவற்றை தாக்கல் செய்யும் வக்கீல்களும், அதற்கு சான்றொப்பம் அளிக்கும் வக்கீல்களும் தங்களுடைய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த அடையாள அட்டையின் மீது நீதிபதிக்கு சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட வக்கீலை அழைத்து விசாரிக்கவும் நீதிபதிக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. போலி வக்கீல்களை கண்டறியும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது பார் கவுன்சில் செய்ய வேண்டிய வேலை. இதனை செய்ய தவறிய பார் கவுன்சிலை கண்டித்தும், உத்தரவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டத்தின் போது உத்தரவு நகலை எரித்துள்ளோம். மேலும் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யும் வரை காலவரையற்ற கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நிலக்கோட்டையில் வக்கீல்கள் காலவரையின்றி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதில் நிலக்கோட்டை வக்கீல் சங்க தலைவர் வணங்காமுடி, செயலாளர் செல்லபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்