அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடும் வாகனங்கள் புகை தணிக்கை சான்றிதழ் பெற்று இருப்பது அவசியம்.

Update: 2018-01-02 22:00 GMT

மதுரை,

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடும் வாகனங்கள் புகை தணிக்கை சான்றிதழ் பெற்று இருப்பது அவசியம். லைசென்சு பெறுவது, பெயர் மாற்றம் செய்வது போன்றவற்றுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு புகை தணிக்கை சான்றிதழ் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். வாகனங்களை திரவ எரிபொருளில் இருந்து, கியாஸ் போன்ற வாயு எரிபொருள்களுக்கு மாற்றுவதால், புகையை கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டும் பல வழிகாட்டுதல்களை அளித்து உள்ளது. காற்று மற்றும் நீர் மாசுபாட்டினால் இறந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே தமிழகத்தில் தாலுகா அளவில் பறக்கும் படைகளை அமைத்து வாகனங்களுக்கு புகை தணிக்கை சான்றிதழ் பெற்று உள்ளார்களா என்று ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து புகை தணிக்கை சான்றிதழ் பெறாமல் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்