அரசு, தனியார் டாக்டர்கள் வேலைநிறுத்தம் சிகிச்சைபெற முடியாமல் நோயாளிகள் அவதி

டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று வேலூர் மாவட்டத்தில் 350 மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2018-01-02 23:00 GMT

வேலூர்,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதில், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவ கல்வி தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இதை கண்டித்தும், புதிய மசோதாவை திரும்ப பெறக்கோரியும் நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டத்திலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதனால் வேலூர் மாவட்டத்தில் நேற்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 350 தனியார் மருத்துவமனைகள், 800 கிளினிக்குகள் திறக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகள் சிகிச்சைபெற முடியாமல் திரும்பி சென்றனர்.

அரசு மருத்துவமனைகளில் காலை 9 மணிமுதல் 10 மணி வரை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஏராளமான டார்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகள் சிகிச்சைபெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். அதேபோன்று வேலூரில் உள்ள பென்ட்லேன்ட் மருத்துவமனையிலும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்