தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு: நீலகிரியில் டாக்டர்கள் வேலை நிறுத்தம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீலகிரியில் நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2018-01-02 21:30 GMT

ஊட்டி,

மருத்துவ கல்வி பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்தது.

இதன்படி நேற்று நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு, தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 36 டாக்டர்கள் நேற்று காலை ஒரு மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பிறகு கருப்பு பட்டை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

அதே நேரத்தில் ஊட்டி நகரில் கிளினிக் நடத்தும் தனியார் டாக்டர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

இதே போல கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 11 டாக்டர்கள் பகல் 12 முதல் 1 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதேபோல் துணை சுகாதார நிலைய மற்றும் தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் 1 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர்.

மேலும் குன்னூர், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர்.

மேலும் செய்திகள்