32 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருப்பு: இலவச அரிசி வேண்டாம் என கலெக்டருக்கு நூதன மனு

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த கேரளபுத்திரன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

Update: 2018-01-02 22:15 GMT

தேனி,

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் கேரளபுத்திரன் தனக்கு அரசு வழங்கும் 35 கிலோ இலவச அரிசி தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்துக்கு மனு அனுப்பி உள்ளார்.

 இந்த நூதன மனு குறித்து கேரளபுத்திரனிடம் கேட்ட போது, ‘நான் 8–ம் வகுப்பு படித்துள்ளேன். கடந்த 1985–ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். தொடர்ந்து 32 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பித்து வருகிறேன். ஒருமுறை கூட பதிவு புதுப்பித்தலை தவறவிடாமல் தொடர்ந்து புதுப்பித்து வருகிறேன். ஆனால், இதுவரை எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. 7 முறை நேர்முக தேர்வுக்காக அழைக்கப்பட்டேன். அங்கும் வேலை கிடைக்கவில்லை. கடந்த 1997–ம் ஆண்டில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் எழுதிக் கொடுத்து வருகிறேன். இதுவரை பொதுமக்களுக்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களை எழுதி உள்ளேன். எனது பிரச்சினை குறித்து நூற்றுக்கணக்கான மனுக்கள் எழுதி விட்டேன். ஆனால், எனது மனுக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. 32 ஆண்டுகளாக காத்திருந்தும் வேலை தராததால், எனக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கும் சலுகையை ரத்து செய்யுமாறு மனு கொடுத்துள்ளேன்’ என்றார்.

மேலும் செய்திகள்