மாவட்டம் முழுவதும் 829 டாக்டர்கள் வேலை நிறுத்தம் தனியார் மருத்துவமனைகள் அடைப்பு

மாவட்டம் முழுவதும் 829 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டன.

Update: 2018-01-02 22:30 GMT

தேனி,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான புதிய மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர்.

அதன்படி தேனி மாவட்டத்திலும் டாக்டர்கள் நேற்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 300 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த தனியார் மருத்துவமனைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. பல மருத்துவமனைகள் கதவு பூட்டப்பட்டு இருந்தது. தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்கு சென்றனர்.

அரசு மருத்துவமனைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் பணியாற்றினர். மேலும், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை ஒரு மணி நேரம் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

புதிய மசோதாவை கண்டித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் அராவழி தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் கம்பம் பள்ளத்தாக்கு கிளை செயலாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து கம்பம் பள்ளத்தாக்கு கிளை செயலாளர் தியாகராஜன் கூறுகையில், ‘மத்திய அரசு மருத்துவத்துறையில் கொண்டு வரும் புதிய மசோதாவை கண்டித்து வேலை நிறுத்தம் செய்துள்ளோம். மாவட்டம் முழுவதும் 829 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இந்த மசோதாவை வாபஸ் பெறவில்லை என்றால் இந்திய மருத்துவ சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்’ என்றார்.

மேலும் செய்திகள்