கவர்னர் பன்வாரிலால் புரோகித் 155 பேரிடம் மனுக்கள் பெற்றார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

தஞ்சையில் 155 பேரிடம் மனுக்களை பெற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த மனுக்கள் மீது உரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Update: 2018-01-02 23:00 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அவரிடம் மனு அளிப்பதற்காக பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே ஆய்வு மாளிகை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு மனுவும் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள், நீண்டவரிசையில் நின்று அறையில் இருந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனுக்களை அளித்தனர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மனுக்கள் அளிக்கப்பட்டது. தமிழில் அளிக்கப்பட்ட மனுவில் உள்ள விவரங்களையும், மனுதாரர்கள் தமிழில் கூறிய கருத்துக்களையும் கலெக்டர் அண்ணாதுரை ஆங்கிலத்தில் கவர்னரிடம் எடுத்து கூறினார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சிலர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

அதில், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 13.50 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போதுள்ள தண்ணீர், நெற்பயிருக்கு போதுமானதாக இல்லை. எனவே பிரதமர் மோடி, கர்நாடகஅரசிடம் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமல்நாதன் மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில், கரும்பு நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டு திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என மத்தியஅரசின் உயர்நிலைக்குழு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

த.மா.கா. மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் கொடுத்த மனுவில், கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 63 டி.எம்.சி. தண்ணீரை மத்தியஅரசு பெற்று தர வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடனை தாமதமின்றி வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அகில பாரத இந்து மகா சபையின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் அளித்த மனுவில், கஞ்சனுர் சுயம்பிரகாசரர் ஆலயம், உமாமகேஸ்வரபுரம் காசிவிஸ்வநாதர் கோவில், கடிச்சம்பாடி வரதராஜபெருமாள் கோவில், நரசிங்கன்பேட்டை யோகநரசிம்மர் கோவில், துக்காச்சி கிராமத்தில் உள்ள சிவன்கோவில் ஆகிய கோவில்கள் மிக மோசமாக இடியும் நிலையில் உள்ளன. இந்த கோவில்களை சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுகிறது. வன்கொடுமை அவசர திருத்தம் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வன்கொடுமை வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கவர்னரிடம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் தெரிவித்தனர்.

இதேபோல 155 பேரிடம் இருந்து கவர்னர் மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்பட்டது. கடைசி நேரத்தில் அறையை விட்டு வெளியே வந்த கவர்னர், வரிசையில் நின்ற பொதுமக்களை தேடி சென்று மக்களை பெற்றார்.

மேலும் செய்திகள்