கவர்னர் ஆய்வுக்கு எதிராக தி.மு.க. – விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தஞ்சைக்கு ஆய்வு செய்ய வந்த கவர்னருக்கு எதிராக தி.மு.க. – விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-02 23:00 GMT

தஞ்சாவூர்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக தஞ்சைக்கு வந்தார். 2–வது நாளான நேற்று தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நடந்த தூய்மை இந்தியா திட்ட பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் குப்பைகளையும் அகற்றினார்.

கவர்னர் ஆய்வு மேற்கொண்டதை எதிர்த்தும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்களில் கவர்னர் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி எதிரே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளர்கள் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து இருந்ததுடன், கவர்னருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர்.

குழந்தையம்மாள் நகரில் தூய்மை இந்தியா திட்ட பணியை ஆய்வு செய்துவிட்டு காரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்றபோது, அவருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடிகளை ஏந்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். சிலர் காரைநோக்கி கருப்புக்கொடிகளை தூக்கி வீசினர். கவர்னர் சென்ற கார் இவர்களை கடந்து சென்ற பின்னர் தி.மு.க.வினர் சிறிது தூரம் ஊர்வலமாக சென்றுவிட்டு கலைந்து சென்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கவர்னருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வேறு ஏதும் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முன்னதாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நிருபர்களிடம் கூறும்போது, ‘கவர்னர் தனது கடமைகளை செய்வதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் மரபுகளை மீறும் வகையில், இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபடுவதை தான் எதிர்க்கிறோம். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறதோ என பிற மாநிலத்தினர் எண்ணுகின்றனர்’ என்றார்.

தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிற்பகல் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரிடம் மனுக்களை பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கையில் கருப்புக் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தாமல் மனுக்கள் வாங்குவது நாடகம் என்பது உள்பட பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஊர்வலம் சுற்றுலா ஆய்வு மாளிகை அருகே வந்தவுடன் போலீசார் தடுத்தனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்