ஆங்கில புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி,
திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இரவு முதலே கோவிலில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். புத்தாண்டான நேற்று மூலவர் முருகனுக்கு தங்க கவசம் மற்றும் பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சண்முகருக்கு தங்க வில்வ இதழ் மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. உற்சவருக்கு தங்க ஆபரண அலங்காரம் செய்யப்பட்டு, நாக வாகனத்தில் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு இருந்தது. விழாவில் சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி அருகில் உள்ள மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், கே.ஜி.கண்டிகை சீரடி சாய்பாபா கோவில் ஆகியவற்றிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
காஞ்சீபுரம்–வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் அடுத்த கூழமந்தல் ஏரிக்கரையில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளும், அவற்றிற்கு உண்டான விருட்சங்களும் கொண்ட கோவில் அமைந்துள்ளது. இவற்றுக்கு நடுநாயகமாக நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் சனி, ராகு, கேது கோவில்கள் உள்ளன.
புத்தாண்டையொட்டி இந்த கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் நேற்று வேதகிரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள் சன்னிதானங்களில் மூலவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புத்தாண்டையொட்டி நேற்று முழுவதும் கோவில் திறக்கப்பட்டு இருந்ததால் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.