சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி நண்பர் படுகாயம்

புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்ற போது சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-01-01 23:14 GMT

மதுராந்தகம்,

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன். இவருடைய மகன் ரஞ்சித்குமார்(வயது 26). அதே ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் விஜயகுமார்(30). இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

ஆங்கில புத்தாண்டையொட்டி நண்பர்கள் இருவரும் மேலும் சிலருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள்களில் காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள மலை மாதா கோவிலுக்கு வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர்.

மேல்மருவத்தூரை தாண்டி சென்டிவாக்கம் என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். அவர், மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், பலியான ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்