மும்பையில் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம் பொதுமக்கள் கடற்கரைகளில் குவிந்தனர்
மும்பையில் புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி கடற்கரை பகுதிகளில் மக்கள் குவிந்தனர்.
மும்பை,
2018 புத்தாண்டு நேற்று பிறந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாலை முதலே கேட்வே ஆப் இந்தியா, கிர்காவ், ஜூகு, மெரின் டிரைவ், பாந்திரா பாண்ட் ஸ்டாண்டு ஆகிய கடற்கரைகளில் ஆயிரகணக்கான மக்கள் திரண்டனர்.
பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் இசை வாத்தியங்களை இசைத்தவாறு ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர்.
சரியாக 12 மணி ஆனதும் புத்தாண்டு பிறந்ததை தெரியப்படுத்தும் வகையில் கண்ணை கவரும் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
இதையடுத்து இளைஞர்கள் உள்பட அனைவரும் புத்தாண்டு பிறந்ததை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். நடனமாடிக் கொண்டும், ஒருவருக்கொருவர் வாழ்த்தை பரிமாறி கொண்டும் புத்தாண்டை கோலாகலத்துடன் வரவேற்றனர்.
இதேப்போல் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் மற்றும் மொட்டை மாடிகளில் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அங்கு அவர்கள் இசை கச்சேரி மற்றும் பிரமாண்ட ஸ்பீக்கர்கள் மூலம் பாடல்களை இசைத்து ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடினர்.
கமலா மில் கேளிக்கை விடுதி தீ விபத்து சம்பவத்தால் இந்த ஆண்டு ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் வழக்கத்தை விட நேற்று முன் தினம் நள்ளிரவு கேட்வே ஆப் இந்தியா மற்றும் கடற்கரை பகுதிகளில் அதிகளவு கூட்டம் காணப்பட்டது.
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்த அனைத்து இடங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கேட்வே ஆப் இந்தியாவுக்கு வந்த பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனி வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவியால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுதவிர போக்குவரத்து போலீசார் நேற்று நள்ளிரவு முழுவதும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்குரிய வாகனங்களை சோதனையிட்டனர். மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
இதேபோல் புத்தாண்டையொட்டி நள்ளிரவு மாகிம், பாந்திரா மலை மாதா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தாராவி, காட்கோபர், செம்பூர், மலாடு, அந்தேரி உள்ளிட்ட மும்பையின் அனைத்து இடங்களிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல் புத்தாண்டை முன்னிட்டு மும்பை முழுவதும் உள்ள தமிழர்களின் இந்து கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தன. மேலும் 2018 புத்தாண்டு நலத்தையும், வளத்தையும் கொடுக்கும் ஆண்டாக திகழ வேண்டும் என தாராவி, செம்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில்களில் தமிழர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.