கோஷ்டி மோதல்: பஞ்சாயத்து எழுத்தர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு 12 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது

மானூர் அருகே நடந்த கோஷ்டி மோதலில் பஞ்சாயத்து எழுத்தர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-01-01 22:30 GMT

மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மேலபிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 29). இவர், ராமையன்பட்டி பஞ்சாயத்து எழுத்தராக உள்ளார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (27) என்பவருக்கும் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக தகராறு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு அய்யாத்துரை தன்னுடைய உறவினர்கள், நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஊரில் உள்ள ஒரு டீக்கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணனுக்கும், அய்யாத்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பாலகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகு அய்யாத்துரை தரப்பினர் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அரிவாள் வெட்டு

சிறிது நேரத்தில் அங்கு வந்த பாலகிருஷ்ணன் தரப்பினர் அய்யாத்துரையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் பாலகிருஷ்ணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீதும் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த சக்தி கண்ணன், மணிகண்டன், பாலசுப்பிரமணியன், இசக்கிப்பாண்டி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்