தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் அனைத்தும் உலக தரத்துக்கு மாற்றப்படும்

தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் அனைத்தும் உலக தரத்துக்கு மாற்றப்படும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

Update: 2018-01-01 22:15 GMT

பழனி,

திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் கலை–பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் பழனி அருங்காட்சியகத்தை அமைச்சர் பார்வையிட்டார். இதையடுத்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள 35 அருங்காட்சியகங்களும் உலக தரத்துக்கு மாற்றப்பட உள்ளன. அருங்காட்சியகங்களை நவீனப்படுத்துவது மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கனவாகும்.

அவருடைய கனவை நனவாக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் அனைத்தையும் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்டி) முறையில் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை தற்போது ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

இதனை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வந்து பார்க்கும் வகையில் அருங்காட்சியகத்தை மேம்படுத்த உள்ளோம். அதேபோல் மொத்தம் உள்ள 35 அருங்காட்சியகங்களில் மாவட்ட அருங்காட்சியகங்களான 20 அருங்காட்சியங்களில் ரூ.4 கோடியில் நவீனப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் உதவியும் கிடைத்துள்ளது. மேலும் அருங்காட்சியகங்கள் இல்லாத ஊர்களிலும் விரைவில் அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தப்படும்.

இதுதவிர அரியலூரில் டைனோசர் முட்டை வடிவில் சில தடயங்கள் கிடைத்துள்ளன. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரில் வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. அவற்றை முறையாக ஆய்வு செய்து காட்சிப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் அரியலூரிலும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு புராதன பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 80 அகழாய்வுகள் நடந்துள்ளன. இதில் 41 ஆய்வுகள் மத்திய அரசு சார்பிலும், 39 தமிழக தொல்லியல் துறை சார்பிலும் நடத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கிடைத்த பொருட்களில் பல கடின அறையில் (ஸ்ட்ராங் ரூம்) பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மற்றவை அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன.

அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மலைக்கிராமங்களில் உள்ள குகைகளில் சமணர்களின் படுக்கைகள், அவர்களின் வாழ்க்கை முறை குறித்த பாறை ஓவியங்கள் உள்ளன. இவை தொல்லியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் காட்சிப்படுத்தப்படவில்லை. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். மேலும் தொல்லியல் சுற்றுலா முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த சுற்றுலா, தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சந்திரா, பழனி அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து நிருபர்கள் அளித்த கேள்விகளுக்கும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:–

கேள்வி:– பழனி அருங்காட்சியகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே அதனை நகராட்சி அலுவலக பழைய கட்டிடத்துக்கு மாற்றலாமே?

பதில்:– பழனி அருங்காட்சியகத்துக்கு தற்போது ஆயிரம்பேர் வரை பார்வையாளர்களாக வருகின்றனர். இடப்பற்றாக்குறையை போக்க தனியாக கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அருங்காட்சியகத்துக்கு சொந்தமான இடத்தில் அந்த கட்டிடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்