வாலிபர் கத்தியால் குத்திக்கொலை 6 சிறுவர்கள் போலீசில் சரண்

கஞ்சா பயன்படுத்த வற்புறுத்திய வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 சிறுவர்கள் போலீசில் சரண் அடைந்தனர்.

Update: 2018-01-01 23:15 GMT

அம்பத்தூர்,

சென்னை அயனாவரம் என்.என்.கே. தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 19). வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இவர் நேற்று காலை அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே அன்னை சத்யா நகர் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே மோகனின் நண்பர்களான சிறுவர்கள் 6 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கஞ்சா பயன்படுத்துவதில் மோகனுடன் தகராறு ஏற்பட்டதாகவும், தங்களை அடிக்கடி கஞ்சா பயன்படுத்துமாறு வற்புறுத்தியதால் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, இந்த கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்