காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு

அங்கன்வாடி பணியாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-01-01 21:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காலியாக உள்ள 890 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனாலும் இன்னும் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளது.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் 200–க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது டிசம்பர் மாதம் 15–ந்தேதிக்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் உறுதி அளித்தார். ஆனால் அதன் பின்னரும் பணியிடங்கள் நிரப்பப்படாததால் 800–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேநிலை தொடர்ந்து நீடிப்பதால் ஒவ்வொரு ஊழியரும் 2 முதல் 4 மையங்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டு கடும் மனஉளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே தற்போது நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்ப வலியுறுத்தி வருகிற 8–ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்