மாதவரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது

மாதவரம் அருகே மோட்டார் சைக்கிள்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-31 22:23 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப்போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாதவரம் துணை கமி‌ஷனர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் மாதவரம் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியம் மேற்பார்வையில் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள மூலசத்திரம் இந்திராநகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், சென்னை வியாசர்பாடி வி.பி.காலனி 6–வது தெருவைச் சேர்ந்த சரவணன்(வயது 20), கொடுங்கையூர் சீனிவாசபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ் எபிநேசர் என்ற நெருப்பு குமார்(20), கொடுங்கையூர் ஜம்புலி தெருவைச் சேர்ந்த குருபிரசாத்(19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள்தான் மாதவரம் பால்பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான சரவணன் மீது செங்குன்றத்தை அடுத்த சோழவரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. குருபிரசாத் மீது கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்