வெளி மாநில பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு காண்டாமிருகம், இந்திய ராஜநாகம் கொண்டுவர ஏற்பாடு அதிகாரி தகவல்

வெளி மாநில பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு காண்டாமிருகம், இந்திய ராஜநாகம் கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

Update: 2017-12-31 22:30 GMT

வண்டலூர்,

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த காண்டாமிருகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. இதே போல குளிர் சாதன அறையில் பராமரிக்கப்பட்டு வந்த இந்திய ராஜநாகமும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பரிதாபமாக இறந்தது.

ஆசியாவிலேயே மிக பெரிய பூங்காவான வண்டலூர் பூங்காவில் காண்டாமிருகம் மற்றும் இந்திய ராஜநாகம் இல்லாமல் இருப்பது பார்வையாளர்களுக்கு மிக பெரிய குறையாக இருந்து வருகிறது.

காண்டாமிருகம், இந்திய ராஜநாகம் ஆகியவற்றை மீண்டும் பூங்காவில் பார்வையாளர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பூங்கா அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:–

இயற்கையான சூழலில் அமைந்துள்ள வண்டலூர் பூங்காவில் காண்டாமிருகம், இந்திய ராஜநாகம் போன்றவற்றை மீண்டும் பார்வையாளர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.

அதற்காக விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின்படி அசாம், பீகார் போன்ற வெளி மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து காண்டாமிருகத்தை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதே போல இந்திய ராஜநாகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்து நடக்கிறது. மிக விரைவில் காண்டாமிருகம், இந்திய ராஜநாகத்தை வண்டலூர் பூங்காவில் பார்வையார்கள் பார்த்து ரசிக்கலாம்.

வண்டலூர் பூங்காவில் கடந்த ஆண்டு மட்டும் பூங்கா அடைப்பிடங்கள் மூலம் நெருப்புக்கோழி, சருகுமான், ஒநாய், காட்டுப்பூனை, காட்டெருமை, சாம்பல் நிற மலை அணில், நீல மான், நீர்யானை, சதுப்பு நிலமான், வெளிமான், கேளையாடு, தங்க நீல பஞ்சவர்ணக்கிளி, ஆப்பிரிக்க பழுப்பு நிறக்கிளி, காட்டுப்பன்றி போன்றவை வெற்றிகரமாக இனவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்