திருபுவனையில் பா.ம.க. பிரமுகர் கொலை; நகை, பணம் கொள்ளை 2 பேர் கைது

திருபுவனையில் பா.ம.க. பிரமுகரை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-31 23:45 GMT

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை காந்திவீதியை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 74). தமிழக மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது பா.ம.க.வில் திருபுவனை தொகுதி துணைத் தலைவராகவும், வன்னியர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் மாநில ஆலோசனைக்குழு தலைவராகவும் இருந்து வந்தார்.

இவருக்கு ஜெயா என்ற மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா இறந்துவிட்டார். இதையடுத்து ஜெயராமன் தனது மகன் மோகன்ராஜ் வீட்டில் வசித்து வந்தார். மற்றவர்கள் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.

ஜெயராமன் தனது வீட்டின் அருகில் 10 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். தினமும் இரவு 11 மணியளவில் வாடகை வீடுகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளதா? கதவு மூடப்பட்டுள்ளதா? என்று பார்ப்பது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் இரவு அந்த குடியிருப்புக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது ஒரு கும்பல் திடீரென்று ஜெயராமனை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தியது. கழுத்தில் குத்துக்காயமடைந்த அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அந்த கும்பல் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்பட 10 பவுன் தங்க நகை மற்றும் சட்டை பையில் வைத்திருந்த 40 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றது.

ஜெயராமனின் அலறல் சத்தம்கேட்டு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விரைந்து வந்து பார்த்த போது ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் இதுகுறித்து திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர்கள் பிரியா, பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜெயராமனை கொலை செய்துவிட்டு நகை–பணத்தை கொள்ளையடித்தது புதுவையை அடுத்த கெங்கராம்பாளையத்தை சேர்ந்த ரூபன்ராஜ்(22) மற்றும் திருபுவனை புதுமனை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவர்கள் கெங்கராம்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

உடனே அங்கு சென்று 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் ஜெயராமனின் வீட்டில் முதலில் வாடகைக்கு குடி இருந்தவர்கள் என்பதும் பணத்திற்காக ஜெயராமனை கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்