குமரி கலெக்டரை முற்றுகையிட்டு போராட்டம்: 106 பேர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி அருகே கீழமணக்குடியில் வர்த்தக துறைமுகம் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்த சென்ற குமரி கலெக்டர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 106 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-12-31 22:15 GMT
தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் இனயத்தில் அமைய இருந்த வர்த்தக துறைமுகம் தற்போது, கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் மணக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அந்த பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 இந்தநிலையில் வர்த்தக துறைமுக திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக நேற்று முன்தினம் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான், தாசில்தார் சஜீத், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் திவான், துறைமுக திட்ட அதிகாரி ஜெயகுமார் மற்றும் சில அதிகாரிகள் கன்னியாகுமரி அருகே கீழமணக்குடிக்கு சென்றனர்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் திரண்டு வந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி  உதவி போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான், தனது ஆய்வு பணி குறித்து மீனவர்களிடம் கூறி சமாதானப்படுத்தினார். இதையடுத்து கலெக்டருக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வடக்கு தாமரைகுளம் கிராம நிர்வாக அதிகாரி சிவராகுல் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

 அந்த புகாரின் அடிப்படையில் கீழமணக்குடி ஆலய அருட்பணியாளர் ஜாண் பெரிட்டோ மற்றும் சகாய கென்னடி, அமல்ராஜ், அந்தோணி அடிமை, ஜோசப், சகாயராஜ் உள்பட 106 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது அரசு அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசுதல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்