பஸ் கவிழ்ந்து விபத்து 13 பெண்கள் உள்பட 23 பக்தர்கள் காயம்

திருப்பத்தூர் அருகே மேல்மருவத்தூருக்கு சென்றபோது பஸ் கவிழ்ந்து 13 பெண்கள் உள்பட 23 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2017-12-31 23:00 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா வீரபள்ளி பாரதி நகரை சேர்ந்த பொதுமக்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையில் மேல்மருவத்தூருக்கு புறப்பட்டனர். 110 பக்தர்கள் 2 பஸ்களில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

பஸ்சை ஆரணியை சேர்ந்த ரவி (வயது 30) என்பவர் ஓட்டினார். பஸ் வயல்களுக்கு நடுவில் உள்ள குறுகலான பாதையில் புதுப்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரோடு குறுகலாக இருந்ததால் பஸ் மெதுவாக சென்றது. அப்போது முதலில் சென்ற பஸ் ரோட்டின் ஓரத்தில் இருந்த 3 அடி பள்ளத்தில் இறங்கிவிட்டது.

இதில் நிலைதடுமாறிய பஸ் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பக்தர்கள் கூச்சலிட்டனர். இதைபார்த்ததும் பின்னால் வந்த பஸ்சில் இருந்தவர்கள் விரைந்து சென்று விபத்துக்குள்ளான பஸ்சில் சிக்கியவர்களை, பஸ் ஜன்னல் வழியாக மீட்டனர்.

இந்த விபத்தில் சாந்தி, மோகனா, குமுதா, புனிதா, காசியம்மாள், சுலோச்சனா, மல்லிகா, செல்வி, மற்றொரு சாந்தி உள்பட 13 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் என மெத்தம் 23 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்