சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் வாடகை கார் ஓட்டும் குணசித்திர நடிகர்

சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் குணசித்திர நடிகர் சங்கர் அஸ்வத், வாடகை கார் ஓட்டி வருகிறார். ‘டிரைவர் என கூறுவதில் பெருமை கொள்கிறேன்‘ என்று அவர் கூறினார்.

Update: 2017-12-31 23:00 GMT
பெங்களூரு,

கன்னட நடிகராக இருந்தவர் அஸ்வத். இவர் மரணம் அடைந்து விட்டார். இவருடைய மகன் சங்கர் அஸ்வத். குணசித்திர நடிகரான இவர் மைசூரு சரஸ்வதி புரத்தில் வசித்து வருகிறார். இவரும் பல்வேறு கன்னட திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்தது. இதனால், அவர் சொந்தமாக தனது குடும்பத்தினரின் உதவியுடன் ஓட்டல் தொடங்கினார். ஆனால், ஓட்டலில் அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் ஓட்டல் தொழிலை கைவிட்டார்.

மேலும், சினிமா வாய்ப்புகளை அவர் தேடினார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், அவர் பெங்களூருவில் உள்ள வாடகை கார் நிறுவனத்தில் சேர்ந்து டிரைவராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து, நடிகர் சங்கர் அஸ்வத் கூறியதாவது:-

தற்போது நான் வாடகை கார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறேன். இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. என்னை நானே டிரைவர் என கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஏனென்றால் டிரைவர் என்பது உன்னதமான தொழில். யாரும் எனக்கு இரக்கம் காட்டுவதை நான் விரும்பவில்லை. விரைவில் எனது தந்தையின் நினைவு நாள் வருகிறது. நினைவுநாளை அனுசரிக்க என்னிடம் பணம் இல்லை. ஆனாலும், எனது தந்தையின் நினைவு நாளை எனது சொந்த செலவில் அனுசரிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக வேலை பார்த்து வருகிறேன்.

நான் ஏராளமான சினிமா மற்றும் சின்னத்திரைகளில் நடித்துள்ளேன். ஆனாலும், வாய்ப்பு கேட்டு நான் யாரிடமும் கெஞ்ச வேண்டியது இல்லை. ஏனென்றால், சுயமரியாதை என்பது முக்கியமானது. பணத்துக்காக நான் யாரிடமும் கையேந்தியது இல்லை. கடின உழைப்பால் பணம் சம்பாதிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்