உதய் விரைவு ரெயிலுக்கான அடுக்குமாடி பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கோவை–பெங்களூரு இடையே இந்த மாதம் இயக்கப்பட உள்ள உதய் விரைவு ரெயிலில் எல்.சி.டி., டெலிவி‌ஷன் தேநீர் வழங்கும் எந்திரத்துடன் இரட்டை அடுக்கு பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2017-12-31 22:00 GMT

கோவை,

உதய் விரைவு ரெயில் என்பது பெரிய நகரங்களுக்கு இடையே வியாபார வகுப்பினர் பயணம் செய்ய இரட்டை அடுக்கு கொண்ட குளிர்சாதன வசதி கொண்டது ஆகும். இதற்காக புதிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட வில்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த இரட்டை அடுக்கு பெட்டிகளை தான் உதய் ரெயில்களுக்காக மாற்றி அமைக்கப்பட்டன.

கோவை–பெங்களூரு இடையேயான உதய் விரைவு ரெயில் கடந்த 2016–ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ரெயிலுக்கான பெட்டிகள் கிடைக்காததால் அந்த ரெயில் இதுவரை இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் கபூர்தலாவில் தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னை ஐ.சி.எப்.பில் உதய் விரைவு ரெயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோவை சமூக ஆர்வலர் கோகிலன் கூறியதாவது:–

புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகளில் 114 சாய்வு வசதியுடன் கூடிய இருக்கைகள் இருக்கும். ஆனால் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த இரட்டை அடுக்கு பெட்டிகளில் 120 இருக்கைகள் இருந்தன. ஏற்கனவே இருந்த பெட்டிகளில் சில இருக்கைகளை நீக்கி விட்டு அந்த இடங்களில் மற்ற ரெயில்களில் இல்லாத வகையில் தானியங்கி தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் குளிர்சாதனப்படுத்தப்பட்ட இந்த ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும், ஒலிபெருக்கியுடன் கூடிய பெரிய எல்.சி.டி. டெலிவி‌ஷன் என நவீனமயமான தோற்றத்துடன் இருக்கும். மேலும் பிற ரெயில்களை விட 40 சதவீதம் கூடுதலான சுமை திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு கட்டணத்தை பொறுத்தவரை 3 அடுக்கு குளிர்சாதன பெட்டியை விட கட்டணம் குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

புதிய ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டன. மற்ற பணிகள் முடிந்து இன்னும் ஒரு வாரத்தில் இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள் ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அந்த பெட்டிகள் இயக்கப்பட்டு பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும், இதையடுத்து அந்த பெட்டிகள் இந்த மாத இறுதிக்குள் கோவை–பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ளது.

புதிதாக இயக்கப்பட உள்ள உதய் விரைவு ரெயில் கோவையில் இருந்து காலை 5.45–க்கு புறப்பட்டு, திருப்பூருக்கு 6.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 7.15 மணிக்கும், சேலத்திற்கு 8.15 மணிக்கும், பெங்களுரூவை மதியம் 12.40 மணிக்கும் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 5.50 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.55 மணிக்கும், திருப்பூருக்கு 7.40 மணிக்கும் கோவைக்கு இரவு 9 மணிக்கும் வந்தடையும்.

இவவாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்