ஆந்திராவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சா பறிமுதல் டிரைவர் கைது

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-12-31 23:00 GMT

வேலூர்,

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக காரில் மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் சித்தூர்–ராணிப்பேட்டை சாலை சேர்க்காடு கூட்ரோடு அருகே நேற்று அதிகாலை 5 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மதுரை பதிவெண் கொண்ட காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரின் டிக்கியில் 4 பாலித்தீன் மூட்டைகள் இருந்தன. அவற்றை போலீசார் திறந்து பார்த்தனர். 4 மூட்டைகளிலும் 124 கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கீரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 31) என்பதும், ஆந்திராவில் இருந்து காரில் மதுரை மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 124 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.12½ லட்சம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் ஈஸ்வரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்