குலசேகரத்தில் சாலையை சீரமைக்க கோரி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மறியல்

குலசேகரத்தில் சாலையை சீரமைக்க கோரி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-29 22:45 GMT

குலசேகரம்,

குலசேகரம் அரசமூடு சந்திப்பில் இருந்து உண்ணியூர்கோணம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை செப்பனிட வேண்டும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை பழுதடைந்த சாலை செப்பனிடப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதையடுத்து பழுதடைந்த சாலையை செப்பனிட வலியுறுத்தி குலசேகரம் அரசுமூடு சந்திப்பில் தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று பகல் 11 மணியளவில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் அரசமூடு சந்திப்பில் குவிந்தனர்.

அவர்கள் பழுதடைந்த சாலையை செப்பனிட கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜெரால்டு, சாந்தி, வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி, தக்கலை போலீஸ் உதவி சூப்பிரண்டு மகேந்திரன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, 15 நாட்களுக்குள் பழுதடைந்த சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் திருவட்டார் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி கிறிஸ்டோபர், ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்