காரமடை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை காட்டு யானை தூக்கி வீசியது

காரமடை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை காட்டு யானை தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

Update: 2017-12-29 23:00 GMT

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே கெண்டேபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 56), தொழிலாளி. அவருடைய மனைவி ராஜாமணி (48). நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாசாணியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பொன்னுசாமி தனது மனைவி மற்றும் பேத்தி பிரியதர்ஷினி (8) ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் சாலையூர் அருகே சென்றபோது அந்த பகுதியில் புதருக்குள் நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென மோட்டார் சைக்கிளை துரத்தியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொன்னுசாமி காட்டு யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார்.

ஆனாலும் காட்டு யானை அவர்களை விடாமல் துரத்தி வந்து, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ராஜாமணியை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பொன்னுசாமி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் உயிருக்கு பயந்து கூச்சல் போட்டனர். இதையடுத்து அந்த காட்டு யானை அங்கிருந்து சென்றது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று காட்டு யானை வனப்பகுதிக்கு சென்றதா? என்பது குறித்து பார்வையிட்டனர். இதையடுத்து வனத்துறை சார்பில், மாவட்ட வன அலுவலர் சதீஷ் உத்தரவின் பேரில் வனவர் ரவி, வனக்காப்பாளர் சகாதேவன் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொன்னுசாமி, ராஜாமணி மற்றும் சிறுமி பிரியதர்ஷினி ஆகியோரை சந்தித்து முதல் கட்ட நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கினர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை காட்டு யானை துரத்தி தூக்கி வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்