காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடை பார் ஏலம் புறக்கணிப்பு

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமம் பெறுவதற்கான ஏலத்தை பார் உரிமையாளர்கள் பலர் புறக்கணித்தனர். உரிமத்தொகை அதிகமாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2017-12-28 22:22 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தெற்கு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 93 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 85 கடைகளில் பார் வசதி உள்ளன. பார் நடத்துவதற்கான உரிமம் கோருவதற்கான ஏலம் காஞ்சீபுரம் டாஸ்மாக் குடோனில் நேற்று நடந்தது. மண்டல மேலாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஏலம் நடந்தது. 85 பார்களில் 27 கடைகளுக்கு ஏலம் கோரப்பட்டது. இதில் 10 கடைகளுக்கான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 கடைகளுக்கான விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. 15 கடைகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

ஏலத்தில் கலந்து கொண்ட பார் உரிமையாளர்கள் அதை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பார் உரிமம் பெறுவதற்கான தொகை அதிகமாக இருப்பதாகவும், மாநகராட்சி பகுதிக்கு 50 சதவீதமாகவும், நகராட்சி பகுதிக்கு 40 சதவீதமாகவும், ஊராட்சி பகுதிக்கு 30 சதவீதமாகவும் உரிமத்தொகை நிர்ணயிக்க வேண்டும், ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் திருவள்ளூர், காக்களூர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 106 டாஸ்மாக் மதுபான கடைகளில் உள்ள பார்களுக்கான ஏலம் நடைபெற்றது. டாஸ்மாக் மண்டல மேலாளர் ராஜராஜன் தலைமை தாங்கினார். உரிமத்தொகை கூடுதலாக இருந்ததால் 13 பார்கள் மட்டுமே ஏலம் போனது. மீதமுள்ள பார்களை யாரும் ஏலம் எடுக்காமல் புறக்கணித்தனர்.

அதேபோல திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் திருமழிசை, அரண்வாயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 260 டாஸ்மாக் மதுபான கடைகளில் உள்ள பார்களுக்கான ஏலம் முதுநிலை மேலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. உரிமத்தொகை கூடுதலாக இருப்பதை கண்டித்து பலர் ஏலத்தை புறக்கணித்தனர். 40 கடைகள் மட்டுமே ஏலம் போனது.


மேலும் செய்திகள்