சுவைமிகு இந்திய கிறிஸ்துமஸ் கேக்

கேக் இன்றைய நாளில் அனைத்து விதமான கொண்டாட்டங்களில் பிரதான இடம் பிடிக்கின்றன.

Update: 2017-12-23 06:01 GMT
கேக் இன்றைய நாளில் அனைத்து விதமான கொண்டாட்டங்களில் பிரதான இடம் பிடிக்கின்றன. முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மட்டுமே அதிகம் பயன்பட்ட கேக் தற்போது பிறந்தாள், விருந்துகள், திருமணவிழா, நிச்சயதார்த்தம், அலுவலக விழாக்கள் என அனைத்திலும் தனக்கென பிரத்யேகமான இடம் பிடித்துள்ளது. கேக் என்பதில் சாக்லேட் கேக், மட் கேக், பட்டர் கிரீம், வானவில் (அ) ப்ரூட் கேக் என்றவாறு உள்ளன. இதில் ஒரு சுற்று, இரண்டு சுற்று, பலதரப்பட்ட சுற்றுகள், அடுக்குகள், வேறுபட்ட பலகேக் இணைந்தது என்பதுடன், சதுரம், செவ்வகம், வட்ட வடிவம் போன்ற பிரதான அளவுகளிலும், தேவைப்படின் பிரத்யேகமான வடிவமைப்பிலும் கேக்குகள் தயார் செய்யப்பட்டு தரப்படுகின்றன.

கேக்கின் முக்கிய அம்சங்கள்

கேக் என்பதின் சராசரி உயரம் 10 செ.மீ தான். சில சமயம் மேற்புற அலங்கரிப்பு பில்லிங் மூலமாக 15 செ.மீ உயரம் வரை தான் அளவு. கேக் என்பது முக்கியமாக இரண்டு விதமான பில்லிங் தான் செய்யப்படுகிறது. ஆதலில் கேனாசே என்ற சுவைமிகுந்த பில்லிங். இதில் கருப்பு சாக்லேட், பால் (அ) வெள்ளை கிரீம் போன்றவையுடன் சிலசமயம் லிகர் கலந்தும் பில்லிங் பணி நிறைவேறும்.

இதற்கடுத்து இத்தாலியன் பட்டர் கிரீம் என்பது மென்மையான வெண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டு மெரிங்கோ கலந்து தயார் செய்யப்படுவது. இதில் சுவைக்கு ஏற்ப எலுமிச்சை, வெனிலா, ஆரஞ்சு, வெளிர் சாக்லேட் கலந்து செய்யப்படுகிறது.

ஐஸிங் என்பது வேகவைக்கப்பட்ட கேக் மீது மெல்லிய தடிமன் உள்ளவாறு சர்க்கரை இனிப்புடன் கூடிய மேல் பூச்சு, இது வெவ்வெறு வகையான கிரீம் மற்றும் வண்ண வடிவமைப்புடன் மேற்பூச்சாக செய்யப்படும். இவை அனைத்தும் கேக் தயாரிப்பில் உள்ள வழிமுறைகள். இந்தியாவில் சில வித்தியாசமான கேக் தயாரிப்புகள் உள்ளன. அதனை காண்போம்.

கோவாவின் படேகா கேக்

கிறிஸ்துமஸ் கொண்டாட் டத்திற்கு என செய்யப்படும் சிறப்பு வகை கேக் தான் படேகா கேக். இதனை செய்ய பால்-1¼ கப், வெண்ணெய்-35 கிராம், சர்க்கரை-1¼ கப், தேங்காய் துருவல்-2¼ கப், ரவை-1½ கப், 2 டிஸ்பூன் வெனிலா சிரம், 1½ டிஸ்பூன் பேக்கிங் பவுடர், ¼ டிஸ்பூன் உப்பு மற்றும் 2 முட்டை.

பெரிய அகன்ற பாத்திரத்தில் பால், வெண்ணெய், சர்க்கரை மூன்றையும் கலந்து அடுப்பில் ஏற்றி சூடாக்கவும். நன்கு சூடாகி வெண்ணெய், சர்க்கரை கறைந்த பின் அடுப்பை நிறுத்தி விடவும். பின் அதில ரவை, தேங்காய் துருவல் மற்றும் வெனிலா எசன்ஸ் விட்டு நன்கு கலக்கவும். பின் இதனை அப்படியே மூடி மூன்று மணி நேரம் வைக்கவும். பின் இரண்டு முட்டையை உடைத்து அதனை நன்கு கலக்கவும். ஹேண்ட் பிளண்டர் மூலம் கலக்கினால் நன்கு பொங்கி வரும். அதனை முன்பு செய்துவைத்திருக்கும் ரவை கலவையுடன் பேக்கிங் சோடாவும் போட்டு நன்கு கலக்கவும்.

இதனை வெண்ணெய் தடவிய கேக் பவுலில் ஊற்றி ஓவனில் 170OC வெப்பநிலையில் சுமார் 30 முதல் 40 நிமிடம் வரை கேக் வேகும் வரை வைத்து பிறகு எடுக்கவும். பின் அதனை 10 நிமிடம் வரை ஆறவிட்டு மெதுவாக வெளியில் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். சுவை மிகு படேகா கேக் தயார்.

சுவைமிகு அலகாபாத் கேக்

உலக புகழ் பெற்ற கிறிஸ்துமஸ் கேக்களில் ஒன்றாக திகழ்வது இந்தியாவின் அலகாபாத் கேக், இது மைதா, முட்டை, வெண்ணெய், சர்க்கரை, பேதா (பாடம் செய்யப்பட்ட பூசணிக்காய்), பருப்புகள், இஞ்சி, சோம்பு போன்றவை கலந்து செய்யப்படும் கேக். இந்தியா முழுவதும் விரும்பி வாங்கப்படும் கிறிஸ்துமஸ் கேக்-ஆன அலகாபாத் கேக் பெரும்பாலும் அலகாபாத்தில் மட்டுமே செய்யப்பட்டு பின் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதிக சுவையுடைய அலகாபாத் கேக்-யின் முழு தயாரிப்பு முறை பாதுகாப்புடனே உள்ளது.

மேலும் செய்திகள்