பொங்கல் பண்டிகையையொட்டி 1 கோடி பேருக்கு விலையில்லா வேட்டி -சேலைகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
பொங்கல் பண்டிகையையொட்டி 1½ கோடி பேருக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 1 கோடியே 63 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான உற்பத்தி பணிகள் ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் உள்ள 126 விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
உற்பத்தி பணி
ஈரோடு மாவட்டத்தில் 61 லட்சத்து 27 ஆயிரத்து 600 சேலைகளும், 62 லட்சத்து 39 ஆயிரத்து 100 வேட்டிகளும், திருச்செங்கோட்டில் 43 லட்சத்து 11 ஆயிரத்து 650 சேலைகளும், 61 லட்சத்து 45 ஆயிரத்து 500 வேட்டிகளும், கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 49 ஆயிரத்து 200 சேலைகளும், 8 லட்சத்து 61 ஆயிரத்து 100 வேட்டிகளும், திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 21 ஆயிரம் சேலைகளும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 500 வேட்டிகளும் என மொத்தம் 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 450 சேலைகளும், 1 கோடியே 38 லட்சத்து 27 ஆயிரத்து 200 வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
வேட்டிகள் உற்பத்தி செய்யும் பணி 100 சதவீதம் முடிவடைந்து விட்டது. சேலைகள் 81 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து விடும். உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி மற்றும் சேலைகள் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய பாடத்திட்டம்
அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர் களிடம் கூறும்போது, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். தமிழகத்தில் 100 இடங்களில் போட்டி தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 312 மையங்கள் வருகிற ஜனவரி மாதம் இறுதிக்குள் தொடங்கப்பட்டு விடும். புதிய பாடத்திட்டத்துக்கு இந்தியாவில் உள்ள அனைத்து கல்வியாளர்கள் மற்றும் 17 நாடுகளை சேர்ந்தவர்கள் வரவேற்பும், ஆதரவும் தந்துள்ளனர். கூட்டத்தில், துணிநூல் மற்றும் காதித்துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் முனியநாதன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், மாவ ட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை தலைவர் ஜெகதீசன் மற்றும் ஈரோடு, திருச்செங்கோடு, கோவை, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.